குஜராத்தில் ஓயாமல் அலையடிக்கும் ஒரு மர்ம கிணறு! பகீர் பின்னணி என்ன?

இந்த கிணற்றில் மட்டும் தண்ணீர் அலைபாய்வதை கண்டு உள்ளூர் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

குஜராத்தில் ஓயாமல் அலையடிக்கும் ஒரு மர்ம கிணறு!
Published on

மோர்பி,

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்துக்கு அருகே உள்ள கிராமத்தின் மர்ம கிணறு ஒன்று மிக அபூர்வமாக தண்ணீர் தளும்பிக் கொண்டே இருந்ததால் அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர்.

உள்ளூர் மக்கள் பெரும் அதிர்ச்சி

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தின் விர்பர்தா கிராமத்தில் கிணறு ஒன்றில் முழுவதும் தண்ணீர் நிரம்பி உள்ளது. அத்துடன் அந்த தண்ணீர் கடலில் அலையடிப்பது போல இருபுற மும் மாறி மாறி சுற்றுச்சுவரை மோதி வருகிறது. பக்கத்தில் உள்ள பிற கிணறுகளில் எந்த மாற்றமும் இல்லாதபோது, இந்த கிணற்றில் மட்டும் தண்ணீர் அலைபாய்வதை கண்டு உள்ளூர் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நிலத்தடி நீர் அதிகாரிகள் ஆய்வு

கடந்த 2-ந்தேதி முதல் உள்ளூர்வாசிகளை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ள இந்த அலைபாயும் கிணறு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இதைத்தொடர்ந்து காந்தி நகரில் இருந்து மாநில நிலத்தடி நீர் ஆய்வு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மர்ம கிணற்றை நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் கூறுகையில், மோர்பியில் சமீபத்தில் பெய்த கனமழையால் நிலத்தடி நீர் முழுவதும் நிரம்பியதே இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர். இதைத்தவிர வேறு சந்தேகத்துக்குரிய நிகழ்வும் அங்கே கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன் எந்தவொரு நில அதிர்வு நடவடிக்கையோ அல்லது புவியியல் இடையூறோ இல்லை என்றும் அவர்கள் கூறியதாக மாவட்ட கலெக்டர் சுவப்னில் காரே தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com