கேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் முத்திரையுடன் கிடந்த துப்பாக்கி குண்டுகள்

கேரள வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த, பாகிஸ்தான் முத்திரையுடன் கூடிய துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள வனப்பகுதியில் பாகிஸ்தான் முத்திரையுடன் கிடந்த துப்பாக்கி குண்டுகள்
Published on

கொல்லம்,

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குளத்துபுழா என்ற இடம் தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் சாலையின் அருகே பிளாஸ்டிக் பை ஒன்று கிடந்தது. அதில் ஏதோ பொருள் இருப்பது போன்று தெரிந்ததால், அந்த வழியாக சென்ற 2 பேர் அதை எடுத்துப் பார்த்தனர். அப்போது அந்த பிளாஸ்டிக் பையில் துப்பாக்கி குண்டுகள் (தோட்டாக்கள்) இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பிளாஸ்டிக் பையை கைப்பற்றினார்கள். அதில் 14 துப்பாக்கி குண்டுகள் இருந்தன.

அந்த குண்டுகளை ஆய்வு செய்த போது, அவற்றில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரை இருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீசார் அங்கிருந்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர். அந்த துப்பாக்கி குண்டுகளை ஆய்வு செய்வதற்காக எர்ணாகுளத்தில் இருந்து ராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரு அதிகாரிகள் கொல்லம் சென்றனர்.

இதுபற்றி கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெகரா கூறுகையில், துப்பாக்கி குண்டுகள் சிக்கிய விவகாரம் பற்றிய விசாரணை பயங்கரவாத தடுப்பு படைக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும், மத்திய விசாரணை அமைப்புகளின் உதவி நாடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பயங்கரவாத தடுப்பு படை டி.ஜி.பி. அனூப் குருவில்லா மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் என்றும், விசாரணையில் அண்டை மாநில போலீசாரின் உதவி கோரப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுடன் கேரளா தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.

கேரள வனப்பகுதிகளில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதால், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி குண்டு எப்படி வந்தன? அவற்றை கொண்டு வந்தது யார்? என்பது பற்றி பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே, கர்நாடகத்தில் இருந்து கேரளா நோக்கி வந்த ஒரு காரை சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை போட்ட போது, அதில் நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் 60 குண்டுகள் இருப்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com