வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் கைதான வாலிபர், போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
Published on

பெங்களூரு:

பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் கைதான வாலிபர், போலீஸ்காரரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

பெண் கற்பழித்து கொலை

பெங்களூரு அருகே பன்னரகட்டா அருகே 38 வயது பெண் வசித்து வந்தார். அவர், கடந்த 12-ந் தேதி மாலையில் தனது சகோதரியின் குழந்தையை அழைத்து கொண்டு வெளியே சென்றிருந்தார். கிராமத்தின் அருகே வாலிபர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவதை குழந்தையுடன் அமர்ந்து அந்த பெண் பார்த்து கொண்டு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த 3 பேர், அந்த பெண்ணையும், குழந்தையையும் தூக்கி சென்றார்கள்.

பின்னர் குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு, அந்த பெண்ணை 3 பேரும் சேர்ந்து கூட்டாக கற்பழித்தனர். மேலும் அவரை 3 பேரும் சேர்ந்து கொலையும் செய்திருந்தனர். அன்றைய தினம் இரவே குழந்தையை குடும்பத்தினர் மீட்டனர். மறுநாள் 13-ந் தேதி கிராமத்தின் அருகே அந்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேர் கைது

போலீஸ் விசாரணையில் அந்த பெண், மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் இதனை சாதமாக பயன்படுத்தி மர்மநபர்கள், அவரை கற்பழித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். மேலும் பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் உத்தரவின் பேரில் ஜிகனி போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மற்றும் பன்னரகட்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டு இருந்தார்.

அதன்பேரில், தனிப்படை போலீசார், கொலையாளிகளை தேடிவந்தனர். பின்னர் பன்னரகட்டா அருகே பேடராயன தொட்டி கிராமத்தை சேர்ந்த சோமு என்ற சோமசேகர் (வயது 27) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்ணை கொலை செய்ததில் சோமு தான் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது.

துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

இதையடுத்து, பெண்ணை கற்பழித்து கொன்ற இடத்திற்கு நேற்று காலை 7.30 மணிக்கு சோமுவை விசாரணைக்காக ஜிகனி போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் உள்ளிட்ட போலீசார் அழைத்து சென்றார்கள். அந்த சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்தில் கிடந்த கத்தியை எடுத்து திடீரென்று போலீஸ்காரர் மாதப்பாவை தாக்கிவிட்டு சாமு தப்பியோட முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சோமுவை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார்.

இதில், சோமுவின் இடது காலில் குண்டு துளைத்தது. அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீஸ்காரர் மாதப்பா, சோமுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜிகனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com