

குர்தாஸ்பூர்,
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி-யும் பாரதீய ஜனதாவின் மூத்த தலைவருமான வினோத் கண்ணா மரணமடைந்ததையடுத்து, காலியான அந்தத் தொகுதிக்கு 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
9 சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 56 சதவித வாக்குகள் பதிவானது. மாநிலத்தில் புதியதாக ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது என பார்க்கும் தேர்தலாகவும் இது இருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 11 வேட்பாளர்கள் களம் கண்டாலும் காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி இடையேதான் போட்டி என பார்க்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே காங்கிரஸ் கட்சி முன்னிலை பிடித்தது.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட்ட சுனில் ஜாகர் 1,08,230 வாக்குகள் முன்னிலை பெற்றதும் அக்கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. பாரதீய ஜனதா வேட்பாளர் ஸ்வாரன் சலாரியா இரண்டாவது இடத்தையும், ஆம் ஆத்மியின் வேட்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் காஜுரியா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலை பெற்றதுமே காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றியை கொண்டாட தொடங்கிவிட்டனர்.
காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாகர் பேசுகையில், குர்தாஸ்பூர் இடைத்தேர்தல் பிரதமர் மோடியின் கொள்கையின் மீதான மக்களின் கோபத்தை எடுத்துச் சென்று உள்ளது என கூறிஉள்ளார். பாரதீய ஜனதா வசம் இருந்த குர்தாஸ்பூர் தொகுதி இப்போது காங்கிரஸ் வசம் சென்றது. குர்தாஸ்பூர் தொகுதியில் 1998, 1999, 2004 மற்றும் 2014 பாராளுமன்ற தேர்தல்களில் பாரதீய ஜனதாவின் வேட்பாளர் வினோத் கண்ணாவே வெற்றி பெற்றார். 2009 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மீண்டும் 2014-ல் நடைபெற்ற தேர்தலில் வினோத் கண்ணா வெற்றி பெற்றார். அவர் மரணம் காரணமாக அங்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் தொகுதி காங்கிரஸ் வசம் சென்றது.
காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாகர் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளரை தோற்கடித்து உள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ள ராகுல் காந்திக்கு நாங்கள் மிகவும் அருமையான தீபாவளி பரிசை கொடுத்து உள்ளோம் என்றார். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் ராகுலுக்கான தீபாவளி பரிசு என கொண்டாடி வருகின்றனர். வெற்றி பெற்ற சுனில் ஜாகர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு தலைமை வாழ்த்து கூறிஉள்ளது.
இதற்கிடையே பாரதீய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி, அரசு அமைப்புகளை பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு தவறாக பயன்படுத்தி உள்ளது என குற்றம் சாட்டிஉள்ளது. காங்கிரஸ் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றியை தனதாக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆம் ஆத்மியின் வேட்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் காஜுரியா பேசுகையில், காங்கிரஸ் ஜனநாயக விரோத வழிமுறைகளை இந்த தேர்தலில் பயன்படுத்தியது என குற்றம் சாட்டிஉள்ளார்.
பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் குர்தாஸ்பூர் வெற்றி இந்தியாவில் காங்கிரஸ் புத்துயிர் பெறுவதற்கான அடையாளம் என கூறிஉள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடுத்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.