

லக்னோ,
உத்தர பிரதேச மாநில சட்டசபையில், எம்.எல்.ஏ ஒருவர் குட்காவை மென்று தரையில் எச்சில் துப்புவது கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.வை கடுமையாக எச்சரித்த சபாநாயகர் சதீஷ் மஹானா, சட்டசபை வளாகத்தின் கண்ணியத்தையும், நேர்த்தியையும் பாதுகாக்குமாறு சட்டசபை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், உத்தர பிரதேச சட்டசபையில் குட்கா, பான் மசாலா உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்து சபாநாயகர் சதீஷ் மஹானா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இன்று சட்டசபையில் கேள்வி நேரத்திற்கு பிறகு பேசிய அவர், "சட்டசபை வளாகத்திற்குள் ஊழியர்கள், அதிகாரிகள் அல்லது வேறு எந்த தனிநபர்கள் உட்பட எவரும் குட்கா அல்லது பான் மசாலா உட்கொள்வது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
அப்போது சட்டசபை உறுப்பினர்கள் சிலர், அபராத தொகையை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். அதற்கு சதீஷ் மஹானா, "அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறும் உறுப்பினர்களின் பெயர்களை குறித்துக் கொள்ளுங்கள். அவர்கள் எச்சில் துப்புவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்போம்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.