

குவாலியர்,
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் சுமார் 3,400 லிப்ஸ்டிக் முத்தத் தடங்களுடன் வலம் வந்த கார் ஒன்று பொதுமக்களின் கவனத்தை மட்டுமல்லாமல், போக்குவரத்து போலீசாரின் கவனத்திற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த ஆதித்யா சிகர்வார் என்பவருக்கு சொந்தமான அந்த காரின் வெளிப்புறம் முழுவதும் முத்தமிட்டது போன்ற லிப்ஸ்டிக் தடங்கள் காணப்பட்டன. இதனைப் பார்த்த சாலையில் சென்றவர்கள் வியப்படைந்து காரை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரத்திலேயே அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.
விசாரணையில், வெளிநாடுகளில் சமூக வலைதளங்களில் பிரபலமான ஒரு வித்தியாசமான டிரெண்டால் ஈர்க்கப்பட்ட ஆதித்யாவின் காதலி, அதனை காரில் செய்து பார்க்க முடிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து காரின் மீது ஆயிரக்கணக்கான லிப்ஸ்டிக் முத்தத் தடங்கள் ஒவ்வொன்றாக பதிவிட்டுள்ளார்.
சுமார் 4 மணி நேரம் செலவிட்டு இந்த 3,400 முத்தத் தடங்களும் காரில் பதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. காரின் பெரும்பாலான பகுதிகள் முத்தத் தடங்களால் நிறைந்திருந்ததால், அது சாலையில் சென்ற இடமெல்லாம் அனைவரது பார்வையில் அந்த காரில் பதிவாகின.
இந்த நிலையில், காரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். புகைப்படத்தில் தெளிவாக தெரிந்த வாகனப் பதிவு எண்ணை வைத்து போலீசார் காரை கண்டுபிடித்தனர்.
பின்னர் காரை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர் ஆதித்யா சிகர்வாரை அழைத்து விசாரணை நடத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அவருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது.
போலீசாரின் நடவடிக்கையைத் தொடர்ந்து தனது தவறை ஆதித்யா சிகர்வார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து காரில் பதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான லிப்ஸ்டிக் முத்தத் தடங்கள் அகற்றப்பட்டு, கார் முழுவதுமாக கழுவி அதன் பழைய தோற்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.
காதலின் அடையாளமாக தொடங்கிய ‘முத்தக் கார்’சமூக வலைதளங்களில் வைரலாகி, இறுதியில் ரூ.5,500 அபராம் செலுத்த வேண்டிய சம்பவம் காதலனுக்கு ஏற்பட்டது.