ஹத்ராஸ் சம்பவம்; 116 பேர் பலியானதில் சதி செயலா...? யோகி ஆதித்யநாத் பதில்


ஹத்ராஸ் சம்பவம்; 116 பேர் பலியானதில் சதி செயலா...? யோகி ஆதித்யநாத் பதில்
x
தினத்தந்தி 2 July 2024 7:29 PM GMT (Updated: 2 July 2024 8:59 PM GMT)

போலே பாபா நிகழ்ச்சியில் 116 பேர் பலியான சம்பவத்தில் ஆக்ரா நகர கூடுதல் டி.ஜி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது என முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து மத போதகரின் சத்சங்கம் நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது, மதபோதகர் போலே பாபா மேடையில் கீழே இறங்கி வந்தபோது, மக்கள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு, அவரை நோக்கி முன்னே சென்றனர்.

இதில், கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி, பலர் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதனால், குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்தது. மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, இது விபத்தோ அல்லது சதி திட்ட செயலோ எதுவாக இருப்பினும், அதன் அடிமட்டம் வரை அரசு ஆராய்ந்து செயல்பட்டு, இதற்கு பொறுப்பான நபர்களுக்கு சரியான தண்டனை வழங்கப்படும் என கூறினார்.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா இருவரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து உள்ளனர். மத்திய அரசு மற்றும் மாநில அரசு, சம்பவத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

இதுபோன்ற சம்பவத்தில், இரங்கல் தெரிவிப்பதற்கு பதிலாக, அரசியல் செய்வது என்பது துரதிர்ஷ்டவசம் மற்றும் கண்டனத்திற்குரியது என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி விசாரிக்க ஆக்ரா நகர கூடுதல் டி.ஜி. தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோரும் சம்பவ பகுதிக்கு சென்றிருக்கின்றனர். சவுத்ரி லட்சுமி நாராயண், சந்தீப் சிங், அசீம் அருண் ஆகிய 3 மந்திரிகளும் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.


Next Story