

பெங்களூரு,
கொரோனா காரணமாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கர்நாடகம் உள்பட பிற நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதனால் 2 ஆண்டு களுக்கு பின்பு கர்நாடகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக மந்திரி சசிகலா ஜோலே செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹக் பயணத்திற்காக 100 சதவீதம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கடந்த 1-ந் தேதியில் இருந்தே ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கி உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது;-
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 31-ந் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நபர்கள் 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதிக்குள் பாஸ்போர்ட்டு வாங்குவது கட்டாயமாகும். விண்ணிப்பிக்கும் நபர்களின் பாஸ்போர்ட்டு 2022-ம் ஆண்டு டிசம்பர் வரை செல்லும்படியாக இருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் பரிசீலித்து அடுத்து ஆண்டு பிப்ரவரி மாதம் குலுக்கல் முறையில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.புனித பயணம் மேற்கொள்பவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். 2022-ம் ஆண்டு மே மாதம் 31-ந் தேதியில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.