கடின உழைப்பும்,அனைவரின் ஆதரவுமே நான் தங்கம் வெல்ல காரணம் - நீரஜ் சோப்ரா

கடின உழைப்பாலேயே ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதாக ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
கடின உழைப்பும்,அனைவரின் ஆதரவுமே நான் தங்கம் வெல்ல காரணம் - நீரஜ் சோப்ரா
Published on

மும்பை:

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் உட்பட ஏழு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு இதுதான். இந்தியா 1900ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. ஆனால் தடகளத்தில் மட்டும் இந்தியாவுக்கு பதக்கம் இல்லாத வெற்றிடம் ஒரு நூற்றாண்டை கடந்த நிலையில், அந்த 121 ஆண்டு கால ஏக்கத்தை நீரஜ் சோப்ரா தணித்திருக்கிறார்.

இதற்கு முன் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 11 வீரர்களை பின்னுக்கு தள்ளி விட்டு 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். டோக்கியாவின் தற்போதைய தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அதிக தூரம் ஈட்டி எறிவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு தடகளத்தில் இந்தியாவின் தங்கப்பதக்க கனவை நிறைவேற்றியுள்ளார்.

தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து மாநில முதல்-மந்திரிகள், விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கடின உழைப்பாலேயே ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதாக ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

ஒலிம்பிக்கில் சிறப்பான முறையில் திறனை வெளிப்படுத்த விரும்பியதாகவும், தங்கப் பதக்கம் உறுதியாகும் வரை தான் ஓய்ந்திருக்கவில்லை.

முதன்முறையாக விளையாட்டரங்கத்துக்குச் சென்றபோது விளையாட்டை எதிர்காலத் திட்டமாகக் கொண்டிருக்கவில்லை.நாட்டுக்காக விளையாடுவோம் பதக்கம் வெல்வோம் என நினைக்கவில்லை.

எனது குடும்பத்திலோ, ஊரிலோ எவரும் விளையாட்டுத் துறையில் இல்லை. கடின உழைப்பாலும், அனைவரின் ஆதரவாலுமே வெற்றிபெற முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, நாளை (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு இந்தியா திரும்புகிறார். வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியும் நாளை மாலை 5 மணிக்கு இந்தியா திரும்புகிறது. இவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கான பாராட்டு விழா, நாளை மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:-

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். இது தவிர, ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுவார் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com