கருணைக் கொலை நடவடிக்கைக்கு உள்ளான ஹரிஷ் ராணாவின் உயிர் பிரிந்தது

தந்தையின் முறையீட்டை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு கருணை கொலை செய்ய அனுமதி அளித்தது.
கருணைக் கொலை நடவடிக்கைக்கு உள்ளான ஹரிஷ் ராணாவின் உயிர் பிரிந்தது
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத்தைச் சேர்ந்த பஞ்சாப் பல்கலைக்கழக மாணவரான ஹரிஷ் ராணா கடந்த 2013-ம் ஆண்டில் 4-ஆவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 13 ஆண்டுகளாக அவர் கோமாவில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஹரிஷை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் அவரின் பெற்றோர் ரிட் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு அளிக்கும் சிகிச்சையை நிறுத்த அனுமதியளித்தது. இந்த விவகாரத்தை மனிதாபிமான முறையில் அணுகுவது அவசியம். ஆதலால் சம்பந்தப்பட்ட நபரின் கண்ணியத்துக்கு எந்த பங்கமும் ஏற்படாமல் அவருக்கான சிகிச்சையை நிறுத்துவது தொடர்பான திட்டம் செயல்படுத்தப்படுவதை டெல்லி எய்ம்ஸ் உறுதி செய்ய வேண்டும். கருணைக் கொலை தொடர்பான சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

நாட்டில், கருணைக் கொலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். ஹரிஷ் ராணாவுக்கு கருணைக் கொலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் வீட்டிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு அவருக்கு கருணைக் கொலை செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. அவர் உயிருடன் இருக்கத் தேவையான மருத்துவ உதவிகள் மெல்ல அகற்றப்பட்டு, அவர் இயற்கையாகவே மரணமடைய தேவையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வந்தது. அவரை சிறப்பு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ரோட்டரி புற்றுநோய் மருத்துவ மையத்தின் நோய்த்தணிப்புப் பராமரிப்புப் பிரிவில் வைக்கப்பட்டு இருந்தார்.இங்குள்ள மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல துறை மருத்துவர்களும் கருணைக் கொலை செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை கவனித்து வந்தனர்.

இந்தநிலையில், மாடியில் இருந்து விழுந்து 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த காசியாபாத் இளைஞர் ஹரிஷ் ராணாவின் (31) உயிர் பிரிந்தது. கடந்த 14ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் காக்கும் கருவிகள் நிறுத்தப்பட்ட நிலையில், 10 நாட்களில் உயிரிழந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com