

சண்டிகர்,
அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள தனோரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மன்ஜித். விவசாயியான இவர், தனது 4 வயது மகன் நிர்வேர் சிங்கை அழைத்துக் கொண்டு நேற்று காலை 6.30 மணிக்கு தோட்டத்திற்கு சென்றார். அங்கு அவர் தோட்ட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தபோது நிர்வேர் சிங், சற்று விலகிச் சென்று விளையாடிக் கொண்டிருந்தான்.
இந்நிலையில், அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றின் அருகே சென்ற நிர்வேர் சிங், எதிர்பாராத விதமாக அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அவனது அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்த மன்ஜித், தனது மகன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்து பதறிப்போனார். உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து தனது மகனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் சுமார் 220 அடி ஆழம் கொண்டு அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து நிர்வேர் சிங்கை அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து, காலை 7.30 மணியளவில் மீட்புப் படையினருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேசிய, மாநில மீட்புப் படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
சுமார் 21 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, இன்று அதிகாலை 3.40 மணியளவில் நிர்வேர் சிங்கை மீட்புப் படையினர் மீட்டனர். ஆனால் குழந்தைக்கு சுயநினைவு இல்லை. இதையடுத்து குழந்தை நிர்வேர் சிங், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அங்கிருந்த டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆழ்துளை கிணற்றில் 4 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்துளை கிணற்றை மூடாமல் வைத்திருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் அஜய் தோமர் சிங் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.