

சண்டிகர்,
அரியானா மாநிலம் குருகிராமில் வீட்டின் கழிவறை கோப்பைக்குள் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள விஷ நாகப்பாம்பை வனவிலங்கு பாதுகாப்பு குழுவினர் மீட்டனர்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள காடோலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் இருந்து தொடர்ந்து விசித்திரமான பாம்பு சீறும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்துள்ளது. அதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர்கள், உடனடியாக வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலர் அனில் காந்தாஸ் தலைமையிலான மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர்.
கழிவறை இருக்கையை ஆய்வு செய்தபோது, அதன் உட்புறத்தில் உள்ள குறுகிய இடைவெளியில் 6 அடி நீளமுள்ள கண்ணாடி நாகப்பாம்பு சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. பாம்பை நேரடியாக வெளியே இழுக்க முடியாததால், மீட்புக்குழுவினர் கழிவறை இருக்கையை மிகவும் கவனமாக உடைத்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, அந்த விஷப்பாம்பு எந்தவித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு, அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், "அதிவேக நகரமயமாக்கல் காரணமாக பாம்புகளின் வாழ்விடங்கள் அழிந்து வருகின்றன. இதனால் உணவு மற்றும் தங்குமிடம் தேடி அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. கடந்த 3 மாதங்களில் மட்டும் இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளனர்.