எந்நேரமும் அரை குறை ஆடையில் கவர்ச்சி: மாமனார், மாமியார் உயிரை பறித்த மருமகள்

சினேகாவின் உடை எப்போதும் கவர்ச்சியான தோற்றமும், நடை, உடை, பாவனையும் ஆஷிஷ்சை கவர்ந்தது.
எந்நேரமும் அரை குறை ஆடையில் கவர்ச்சி: மாமனார், மாமியார்  உயிரை பறித்த மருமகள்
Published on

புதுடெல்லி,

ரீல்ஸ் மோகம் இன்றைய தலைமுறையினரிடம் அதிகமாகவே உள்ளது. அதிகரித்தும் வருகிறது. காலையில் தூங்கி எழுந்தவுடன் காபி குடிக்கிறார்களோ இல்லையோ செல்போனில் ரீல்ஸ் பார்க்க தொடங்கி விடுகிறார்கள் அந்த அளவுக்கு மோகத்தில் பலரும் மயங்கி கிடக்கிறார்கள். பல ரீல்ஸ்கள் நகைச்சுவையாகவும் சிந்தனையை தூண்டுவதாக உள்ளது மறுப்பதற்கில்லை. ஆனால் பல ரீல்ஸ்சுகள் பார்வையாளர்களை எப்படியாவது கவர வேண்டும் என்பதற்காக படுகவர்ச்சியானவும் உருவாக்கப்படுகிறது.

கவர்ச்சியான உடைகள் எல்லாம் பல நேரங்களில் பார்வையாளர்களை முகம் சுளிக்கவைக்கிறது. மிகவும் ஆபாசமாக பதிவிடப்படும் இந்த மாதிரி ரீல்ஸ்களை பார்ப்பவர்கள், இவர்களுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்களா என்று பலரும் நினைப்பது உண்டு. இதன் பின்ணனியில் எத்தனையோ குடும்பங்கள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் என்ற கதையில் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ரீல்ஸ் மோகத்தில் அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நாரா கிராமம் உள்ளது. இந்த கிராமம் புதுமையை ஏற்றுகொண்டாலும் பழமையின் பெருமையை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 46) இவரது மனைவி சுமன் (வயது 44). இந்த தம்பதிகளின் மகன் ஆஷிஷ் (வயது 22)

இளைஞரான ஆஷிஷ் சமூக வலைதள பக்கங்களிலும் உலா வருபவர். அப்படி உலா வந்தபோது கண்ணில்பட்ட பெண்ணை பின் தொடர தொடங்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கும், ஆஷீஷ்சுக்கும் இடையே ஏற்பட்ட போன் தொடர்பு காதலாக மாறியது. அந்த பெண்ணின் பெயர் சினேகா (வயது 21), டெல்லியை சேர்ந்தவர்.

சினேகாவின் உடை எப்போதும் கவர்ச்சியான தோற்றமும், நடை, உடை, பாவனையும் ஆஷிஷ்சை கவர்ந்தது. இதனையடுத்து தங்கள் காதலை இருவரும் தங்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். குடும்பத்தினரும் சம்மதித்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது 15 மாதங்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு சினேகா நல்லதொரு குடும்பபாங்கான பெண்ணாக மாற வேண்டும் என்ற எண்ணம் அவரது மாமனாருக்கும், மாமியாருக்கும் இருந்து உள்ளது. இது எல்லா பெற்றோரிடமும் இருப்பதுதான். ஆனால் மருமகள் அதை விரும்பவில்லை. ரீல்ஸ்சை விரும்பினார். அதையே ரசித்தார். மாமனார் ரியல் லைப்பை விரும்பினார். அதைத்தான் ரசிக்கவும் செய்தார். இருவரது ரசனைகளும் இரு துருவங்கள் ஆனவை. மருமகள் சினேகா குட்டை பாவாடை. அரைகுறை ஆடையுடன் ஆபாச போஸ்களுடன் வலைதளங்களில் வலம் வந்ததும் அதை பார்த்து அக்கம், பக்கத்தினரும் ஊராரும் முகம் சுழித்ததும் ராஜேஷை வேதனை அடைய செய்துள்ளது.

இது பற்றி ராஜேஷ் தனது மருமகள் சினேகாவிடம் ஏம்மா...நம்ம குடும்பத்திற்கு என்று பாரம்பரியம், கலாசாரம் இருக்கிறது. இப்படி அரை குறையாக ஆடை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிடாதே. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நம்ம குடும்பத்தை பற்றி என்ன நினைப்பார்கள். கேவலமாக பேசுவார்கள். எனவே இந்த பழக்கத்தை விட்டு விடு என்று பலமுறை சொல்லி இருக்கிறார். ஆனாலும் சினேகா கேட்ட பாடில்லை.

இது பற்றி ராஜேஷ் தனது மகனிடம் சொல்லி வேதனைப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து ஆஷிஷ் தனது காதல் மனைவி சினேகாவிடம் அதனது பெற்றோருக்கு இந்த மாதிரி ரீல்ஸ் போடுவது பிடிக்கவில்லை என்று கூறி இதை தவரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் சினேகா என்ன இது உங்க அம்மா, அப்பாவுக்கு பிடிக்கவில்லை என்றால் இப்படி உடை உடுத்த கூடாதா? அவர்கள்தான் நாகரீகம் தெரியாமல் இருக்கிறார்கள் என்றால் நீங்களுமா இப்படி என்று கணவரின் வாயை அடைத்துவிட்டார். அதன் பிறகு ஆஷீஷ் தனது பெற்றோரிடம் அவள்தான் சின்ன பிள்ளை ஆசைப்படுகிறாள் அவள் விருப்பப்படி இருந்துவிட்டு போகட்டும் இதை எல்லாம் ஏன் பெரிதாக எடுத்துகொள்கிறீர்கள் என்று பெற்றோர் வாயை அடைக்க முயற்சித்துள்ளார்.

இதனால் வேறு வழியின்றி தனது சம்பந்தி வீட்டில் பேசி இருக்கிறார். ஆனால் டெல்லி நகரத்து வாசனையை அனுபவித்து வரும் அவர்கள் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துகொள்ளவில்லை. மாறாக அதில் என்ன தவறு இருக்கிறது. நீங்கள் தான் ரசிக்க தெரியாதவர்கள் என்று ராஜேஷையும் அவரது மனைவியையும் திட்ட தொடங்கி இருக்கிறார்கள். இதனால் இரு குடும்பங்களுக்கும் மனகசப்பு உருவாகி இருக்கிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில் ஒரு கட்டத்தில் சினேகா தனது மாமியாரையும், மாமனாரையும் தாக்கியும் இருக்கிறார். இது அவர்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது.

சினேகாவின் நவீன வாழ்க்கை முறை தேர்வுகள் ராஜேஷ் குடும்பத்தினரை சங்கடத்திற்குள்ளாக்கியது. காலப்போக்கில் மருமகள் திருந்த போவதில்லை. இதனால் நாம் வருந்தி எதுவும் ஆகபோவதும் இல்லை என்று மனம் நொந்த ராஜேசும் அவரது மனைவி சுமனும் தற்கொலை செய்ய முடிவு செய்து விஷம் குடித்தார்கள்.

வீட்டில் மயங்கி கிடந்த அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ரஜேஷின் சகோதரர் மத்லொடா போலீசில் புகார் அளித்த புகாரின் பேரில், சினேகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சாவுக்கு காரணமான சினேகாவின் வலைதள பக்கத்தில் இடம்பெற்ற ஏராளமான கவர்ச்சிகரமான படங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள் இந்த சம்பவத்தை தொடர்ந்து சினேகா, அவரது பெற்றோரும் தலைமறைவாகி விட்டனர். காதல் மனைவியால் குடும்பம் குதூகலமாக மாறும் என்று நினைத்த ஆஷிஷ் மனைவியின் விபரீத எண்ணங்களாலும் செயல்பாடுகளாலும் பெற்றோரை இழந்து தவித்து வருகிறார். அவரும் இது தொடர்பாக மனைவியை பலமுறை கண்டித்ததாகவும் ஆனால் அந்த மோகத்தில் இருந்து அவர் விடுபடவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com