அரியானா: காதல் தம்பதி ஆணவ கொலை; 11 பேர் மீது வழக்கு பதிவு

அரியானாவில் எதிர்ப்பை மீறி, காதலர்களான மீனா மற்றும் தேஜ்வீர் இருவரும் ஆரிய சமாஜ் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
அரியானா: காதல் தம்பதி ஆணவ கொலை; 11 பேர் மீது வழக்கு பதிவு
Published on

ஹிசார்,

அரியானாவின் ஹன்சி நகரில் படாலா கிராம பகுதியை சேர்ந்தவர் தேஜ்வீர் (வயது 27). சுல்தான்பூர் கிராம பகுதியை சேர்ந்தவர் மீனா (வயது 24). மீனாவின் தந்தை வழி அத்தையை, தேஜ்வீரின் தாய் வழி மாமா திருமணம் செய்து இருக்கிறார்.

இந்நிலையில், மீனா மற்றும் தேஜ்வீர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இந்த காதலை மீனாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், இந்த எதிர்ப்பை மீறி கடந்த ஏப்ரல் 22-ந்தேதி அவர்கள் இருவரும், காசியாபாத் நகரில் ஆரிய சமாஜ் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த சூழலில், மீனா மற்றும் தேஜ்வீர் இருவரையும் ஹன்சி நகரில் உள்ள லாலா ஹுகம் சந்த் ஜெயின் பூங்காவுக்கு வரும்படி, மீனாவின் இளைய சகோதரரான சச்சின் (வயது 21) அழைத்துள்ளார். இதனை நம்பி அவர்கள் 2 பேரும் சென்றுள்ளனர்.

அப்போது, மீனாவின் தாய் வழி மாமாவின் மகனான ராகுலும், சச்சினுடன் வந்துள்ளார். இவர்கள் இருவரும் அந்த தம்பதியை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.

இந்த தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த தேஜ்வீரின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 11 பேருக்கு எதிராக வழக்கு ஒன்று பதிவானது.

இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என ஜிந்த் மாவட்ட எஸ்.பி. மக்சூட் அகமது கூறியுள்ளார். தேஜ்வீரின் தாய் வழி மாமா மகேந்தரின் மகன் வீரேந்தர், அவருடைய தாய் வழி அத்தை குத்தி தேவி உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஜிந்த் மாவட்டத்தின் தரியாவலி கிராமத்தில் இருந்த சச்சின் மற்றும் ராகுல் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com