

ஜின்ட்,
அரியானா மாநிலம் ஜின்ட் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த இந்திய தேசிய லோக் தளம் கட்சியை சேர்ந்த ஹரிசந்த் மிட்டா மரணத்தை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அங்கு சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த ஹரிசந்த் மிட்டாவின் மகன் கிரிஷன் மிட்டா பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு, 12,935 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஜனநாயக் ஜனதா கட்சி வேட்பாளர் திக்விஜய் சிங் சவுதாலா 2-வது இடத்தையும், காங்கிரஸ் வேட்பாளரும், அகில இந்திய செய்தி தொடர்பாளருமான ரந்தீப்சிங் சுர்ஜேவாலா 3-வது இடத்தையும் பெற்றனர். அரியானாவின் முக்கிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு 5-வது இடமே கிடைத்தது. புதிதாக தொடங்கப்பட்ட லோக்தந்திர சுரக்ஷா கட்சி 4-வது இடத்தை பெற்றது. இதுவரை பா.ஜனதா வெற்றி பெறாத ஜின்ட் தொகுதியில் வெற்றி தேடித்தந்த மக்களுக் கும், கட்சியினருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
சில மாதங்களில் அங்கு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் ரந்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.