சிறுமி கொலையில் கைதாகி ஜாமீனில் வந்த போது தாயையும் கொன்று மும்பையில் கைதான தஷ்வந்த் தப்பியோட்டம்

சிறுமி ஹாசினி கொலையில் கைதாகி ஜாமீனில் வந்தபோது பெற்ற தாயை கொன்ற தஷ்வந்த தப்பி ஓடினார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிறுமி கொலையில் கைதாகி ஜாமீனில் வந்த போது தாயையும் கொன்று மும்பையில் கைதான தஷ்வந்த் தப்பியோட்டம்
Published on

மும்பை,

சென்னை மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம் ஹாசினி என்ற 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் குற்றவாளி தஷ்வந்தை போலீஸ் கைது செய்தது. சிறுமியின் உடலை தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையோரம் அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்தார் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது.

இதையடுத்து குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு தஷ்வந்த், அவரது தந்தை சேகர், தாய் சரளா ஆகியோர் வாடகைக்கு வந்தனர். இந்தநிலையில், சூதாட்டம் மற்றும் போதைக்கு அடிமையான தஷ்வந்த் கடந்த 2-ந்தேதி தனது தாயிடம் சூதாட்டத்தில் ஈடுபட பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர், தனது தாய் என்றும் பார்க்காமல் சரளாவை கொலை செய்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 25 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். இதையடுத்து தஷ்வந்த்தை குன்றத்தூர் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடினர். மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மும்பையில் கைதாகிய தஷ்வந்தை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சென்னை அழைத்துவர காவல்துறை அனுமதி பெற்றது.

மும்பையில் கைது செய்யப்பட்ட ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் தப்பியோடிவிட்டார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாந்த்ராவில் இருந்து சென்னைக்கு அழைத்து வர விமான நிலையம் சென்றபோது தஷ்வந்த் தப்பினார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com