

புதுடெல்லி,
குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சுமார் 20 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.இந்த பயங்கர சம்பவத்துக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் மற்றும் சிமி பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் சுபான் குரேஷி என்ற பயங்கரவாதி தப்பி ஓடிவிட்டார்.
இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தின் இணை நிறுவனரான இவரை பற்றி விசாரணை நடத்தியபோது, அவர் நேபாளத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. இடையில் சில மாதங்கள் சவுதி அரேபியாவிலும் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அவரது கூட்டாளிகள் மூலம் அவரது நடவடிக்கைகளை உளவுத்துறையும், சிறப்பு பிரிவு போலீசாரும் கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் டெல்லி அருகே உள்ள காசிப்பூரில் வசித்து வரும் தனது கூட்டாளி ஒருவரை சந்திக்க அப்துல் சுபான் குரேஷி வருவதாக சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கே கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.
போலீசாருக்கு கிடைத்த தகவலின்படியே பயங்கரவாதி அப்துல் சுபான் குரேஷி, காசிப்பூருக்கு வந்தார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை வெடித்தது. இறுதியில் போலீசார் குரேஷியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இந்தியாவின் பின்லேடன் என்று கூறப்பட்ட அப்துல் கபான் குரேஷி கைது செய்யப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட நிலையில், அப்துல் சுபான் குரோஷியின் தந்தை, தனது மகன் பயங்கரவாதி இல்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து குரோஷியின் தந்தை கூறுகையில், அப்துல் சுபான் குரேஷி ஒருபோதும் பயங்கரவாத செயலில் ஈடுபடவில்லை எனவும் அதிகாரிகள் தாங்கள் விரும்புவதை சொல்லட்டும் என்றார்.