அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி

மினி பேருந்து அதிவேகத்தில் சென்றதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி
மினி பேருந்து - லாரி
Published on: 

குவஹாத்தி,

அசாம் மாநிலம் காசிரங்கா தேசியப் பூங்கா அருகே மினி பேருந்தும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், கல்லூரி மாணவர்கள் உள்பட 23 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து

அசாம் மாநிலம் கோலாகாட் பகுதியிலிருந்து நாகான் நோக்கி பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. காசிரங்கா தேசிய பூங்கா அருகே உள்ள ரங்கஜன் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, எதிரே மேல் அசாம் பகுதியை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

இந்த கோர விபத்தில் பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், கல்லூரி வகுப்புகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உயரும் பலி எண்ணிக்கை?

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பேருந்தில் பயணித்தவர்களின் சரியான எண்ணிக்கை உடனடியாக தெரியவராத நிலையில், காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மினி பேருந்து அதிவேகம்

மினி பேருந்து அதிவேகத்தில் சென்றதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நெஞ்சை உலுக்கும் இந்த விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X