

சுகாதாரத்துறைக்கு முன்னுரிமை
மும்பையில் நேற்று நடைபெற்ற ஊட்டசத்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மை விவகாரத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
மோடி அரசில் மருத்துவம், சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. நாட்டிற்கு மிகவும் மலிவான விலையில் தரமான சுகாதார சேவைகளை வழங்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷன் என்ற திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு சுகாதார ஐ.டி. வழங்கப்படுகிறது.
புதிய எய்ம்ஸ்
ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 2 கோடியே 11 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி கடந்த 2014-ம் ஆண்டு முதல் 15 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 381-ம் ஆண்டில் இருந்து தற்போது 565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜன் ஆஷாதி மையங்கள் மூலமாக ஏழைகளுக்கு மலிவு விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது. இந்திரதனுஷ் மிஷன் திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடி குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு தன்னிறைவு
ஒரு ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் ஒரு தொற்றுநோயை சமாளிக்க போதுமான வசதிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது கொரோனா தடுப்பூசிகள், சோதனை கருவிகள், மருத்துவ ஆக்சிஜன் மற்றும் கொரோனா மருத்துவமனைகளில் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது.உலகின் மிகப்பெரிய இலவச கொரோனா தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் நடந்து வருகிறது. இங்கு 69 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தொற்றுநோயின்போது 80 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
திறம்பட கையாண்டது
மக்களின் நல்வாழ்வு மற்றும் உடல்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு காரணமாக, இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருந்தபோதிலும் வளமான நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா கொரோனா வைரஸ் சவாலை திறம்பட எதிர்கொண்டுள்ளது.மத்திய அரசின் போஷன் அபியான் நாட்டின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை ஒழிக்கும் சேவையை திறம்பட செய்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம்பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே இது ஒரு சிறந்த திட்டமாக வளர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.