கொழுப்பு அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களில் தனியார் நிறுவன பெண் அதிகாரிக்கு உடல்நிலை பாதிப்பு; டாக்டர் மீது குற்றச்சாட்டு கூறி கண்ணீர் மல்க வீடியோ

பெங்களூருவில், கொழுப்பு அறுவை சிகிச்சை செய்த 10 நாட்களில் தனியார் நிறுவன பெண் அதிகாரி பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இதனால் அவர் கண்ணீர் மல்க டாக்டர் மீது குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அகன்ஷா
அகன்ஷா
Published on

பெங்களூரு:

பக்க விளைவுகளால் பாதிப்பு

டெல்லியை சேர்ந்தவர் அகன்ஷா. இவர் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உடல் எடையை குறைக்க பெங்களூரு எம்.எஸ்.பாளையாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அகன்ஷா, கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தெரிகிறது.

ஆனால் அறுவை சிகிச்சை செய்த பின்னர் அகன்ஷா வயிற்றில் புண் வந்து உள்ளது. மேலும் கடுமையான உடல் வலியாலும் அவர் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து தனக்கு கொழுப்பு அறுவை சிகிச்சை செய்த டாக்டரை தொடர்பு கொண்டு அகன்ஷா பேசி உள்ளார். அப்போது டாக்டர் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

உடல் வலியால் அவதிப்படுகிறேன்

இதனால் அகன்ஷா இன்னொரு டாக்டரை தொடர்பு கொண்ட போது இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அகன்ஷா கண்ணீர்மல்க ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனக்கு வயிற்றில் புண் ஏற்பட்டு உள்ளது.

உடல் வலியால் கடுமையாக அவதிப்படுகிறேன். எனக்கு அறுவை சிகிச்சை அளித்த டாக்டர் கார்த்திக் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்து உள்ளார். அவரை சும்மா விடமாட்டேன். அவர் செய்த மோசடி பற்றி கூறுவேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது.

வீடியோ வைரல்

அப்போது இன்னொரு பெண்ணும் கொழுப்பு அறுவை செய்ய வந்து இருப்பதாகவும், அவரிடம் கொழுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் பக்க விளைவு ஏற்படாது என்று கூறும்படியும் என்னிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறியபடி நான் கூறினேன். அந்த பெண்ணுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

வீடியோவை பார்ப்பவர்கள் அந்த ஆஸ்பத்திரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொழுப்பு அறுவை சிகிச்சையின் போது கன்னட இளம் நடிகை சேத்தனா ராஜ் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com