

புதுடெல்லி,
சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நேற்று 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை ஒட்டி கோர்ட்டு வளாகத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் கூடியிருந்தனர்.
நேற்று காலை தீர்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் கோர்ட்டுக்குள் ஆ.ராசா, அவருடைய மனைவி, மகள், கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி. நிர்வாகி அமிர்தம், மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவன இயக்குனர்களும் அதிகாரிகளும், செய்தியாளர்களும், வக்கீல்களும் குவிந்து இருந்தனர்.
கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாள், கணவர் அரவிந்தன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், பொன்முடி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன்., ஆர்.எஸ். பாரதி, முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி உள்ளிட்ட தி.மு.க.வினர் பலரும் வந்திருந்தனர்.
நீதிபதியை வணங்கினார்
கோர்ட்டு வளாகத்தில் ஏராளமானோர் கூடியிருந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நீதிபதி ஓ.பி.சைனி, தீர்ப்பு வழக்கியவுடன் கோர்ட்டு அறையில் உணர்ச்சிப்பெருக்கில் பலரும் ஆனந்த கண்ணீர்விட்டு அழுதனர். ஆனந்த கண்ணீர்விட்ட ஆ.ராசா இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி நீதிபதியை வணங்கினார். ஆ.ராசாவின் மனைவியும், மகளும் அவரது கரங்களை பற்றிக்கொண்டனர்.
ராசாத்தி அம்மாளும் கண்ணீர் மல்க கனிமொழியை கட்டிப்பிடித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஆளுயர மாலை
கோர்ட்டு வளாகத்துக்கு வெளியே தி.மு.க. தொண்டர்கள் சந்தோஷ மிகுதியில் அந்த வழியாக சென்ற பஸ்களை நிறுத்தி நடனமாடியும், கோஷங்கள் எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
கோர்ட்டு வளாகத்தில் இருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஆ.ராசாவை தொண்டர்கள் தோளுக்கு மேல் தூக்கிக்கொண்டு நடனமாடினர். ஆளுயர மாலை அவருக்கு அணிவிக்கப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.