அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை இன்றுமுதல் மீண்டும் தொடக்கம்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ப்ராண்டியர் லைப் லைன் மருத்துவமனையுடன் இணைந்து இருதய அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. இதுவரை 234 பேருக்கு இருதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக இருதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது.

இதற்காக இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனை மற்றும் ப்ராண்டியர் லைப் மருத்துவமனைகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டசபை அலுவலகத்தில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் சென்னை தனியார் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் செரியன், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அருண் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.

இதுபற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறுகையில்:-

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட இருதய அறுவை சிகிச்சைகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் வாரத்துக்கு 6 முதல் 10 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்படும். புதுச்சேரியில் உள்ள மருத்துவர்களும், சென்னையிலுள்ள மருத்துவர்களும் காணொலி மூலம் பேசி நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்க ஆலோசனை செய்யப்படும்.

இதன் மூலம் ஏழை எளிய மக்கள் சென்னைக்கு செல்லாமல் புதுச்சேரியிலேயே தரமான இருதய சிகிச்சை பெற முடியும். இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் கொரோனாவை ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ரங்கசாமி கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார், மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன், இருதயவியல் துறை டாக்டர்கள் ஆனந்தராஜா, மணிவர்மன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com