

நகரி,
தெலுங்கானா மாநிலம் மஞ்சிர்யாலா மாவட்டத்தில் உள்ள இந்தாரம் கிராமத்தை சேர்ந்தவர் லலிதா (வயது 35). தீவிரமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு குடும்ப உறுப்பினர்கள் கரீம் நகரில் சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை விரைவில் குணமாவதுபோல தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரோடு தங்கி கவனித்துக் கொள்ள தங்களால் முடியாது என்று நினைத்த குடும்பத்தினர் அவரை காரில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு போகலாம் என்று கூறி ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து வந்தனர்.
ஆனால் வீட்டுக்கு வராமல் வெள்ளிக்கிழமை காட்டாரம்- மேடாரம் பிரதான சாலைக்கு பக்கத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் புதரில் அவரை இறக்கி படுக்க வைத்து விட்டு சென்று விட்டனர். இதை அந்த வழியாக வந்த காட்டாரத்தை சேர்ந்த மல்லேஷ் என்பவர் கவனித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து காட்டில் கவனிப்பாரற்று கிடத்தப்பட்டிருந்த பெண்ணை மீட்டு, மகாதேவபூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குடும்ப உறுப்பினர்களுக்கு இதுகுறித்து தகவல் அளித்தும் அவர்கள் அதில் அக்கறை காட்டாமல் இருப்பதாக போலீசார் கூறி உள்ளனர். இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.