

திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த ஜுன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
குறிப்பாக, எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, திரிச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவு போன்ற சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 11 பேர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, வெள்ளம் நிலச்சரிவில் 4 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 8 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.