கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக, அங்கு 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்கள்

இதன்படி எர்ணாகுளம், வயநாடு, காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடிகள், பள்ளிகள், மதரஸாக்கள், பயிற்சி மையங்கள், சிறப்பு வகுப்புகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையிலிருந்து விலக்கு

இருப்பினும், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் உள்ள தங்கும் வசதி கொண்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முன்னரே திட்டமிடப்பட்ட பல்கலைக்கழகத் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் ஆகியவை திட்டமிட்டபடியே நடைபெறும் என்று காசர்கோடு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கோழிக்கோடு

கோழிக்கோடு மாவட்டத்தில், வடகரை மற்றும் தாமரச்சேரி ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மாவட்ட கலெக்டர் விடுமுறை அறிவித்துள்ளார். இப்பகுதி பள்ளிகள், மதரஸாக்கள், பயிற்சி மையங்கள் (tuition centres), தொழில்முறை கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடிகள் ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பொருந்தும். எனினும், தேவைப்பட்டால் கல்வி நிறுவனங்கள் இணையவழிக் வகுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஆரஞ்சு' எச்சரிக்கை

இதற்கிடையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் அங்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையை விடுத்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com