குர்கானில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை, வீட்டிலிருந்தே பணியாற்ற நிறுவனங்கள் அறிவுறுத்தல்

சுபாஷ் சவுக் பகுதியில் பள்ளிப் பேருந்துகள் பல மணி நேரம் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளி வாகனம் வெள்ள நீரில் சிக்கியது.
குர்கான் சுபாஷ் சவுக் பகுதியில் வெள்ளம்
Published on

டெல்லி,

டெல்லி குர்கானில் பெய்த 75 மி.மீ கனமழையைத் தொடர்ந்து, போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளும், தனியார் நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

கனமழை- பாதிப்பு

டெல்லி குர்கானில் நேற்று (திங்கட்கிழமை) ஒரே நாளில் சுமார் 75 மி.மீ மழை பதிவாகியது. இதனால் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஏரிகள் போல் காட்சியளிக்கின்றன. குறிப்பாக சிக்னேச்சர் டவர் முதல் ஹீரோ ஹோண்டா சவுக் வரையிலான சாலைகளில் 15 நிமிட பயண நேரம் 50 நிமிடங்களாக அதிகரித்துள்ளது. சுபாஷ் சவுக் பகுதியில் பள்ளிப் பேருந்துகள் பல மணி நேரம் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு

சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும் குர்கான் மாவட்ட ஆட்சியர் உத்தம் சிங், அவசர ஆலோசனையை வெளியிட்டார். அதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தவும், தனியார் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்

டெல்லி - ஜெய்ப்பூர் விரைவுச்சாலை (சைபர் ஹப் பகுதி அருகில்) ராஜீவ் சவுக் மற்றும் இப்கோ சவுக், சீத்லா மாதா சாலை, சுபாஷ் சவுக் மற்றும் பசை சாலை போன்ற பகுதிகள் இந்த கனமழை காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

வானிலை முன்னறிவிப்பு- பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, இன்று குர்கானில் மேகமூட்டத்துடன் கூடிய லேசானது முதல் மிதமான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°C வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°C வரையும் பதிவாகலாம். எனினும், நாளை (புதன்கிழமை) முதல் மழை குறைந்து வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே பயணங்களைத் தவிர்க்குமாறும், நீர்நிலைகள் மற்றும் தேங்கியுள்ள வெள்ளப் பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் போக்குவரத்து போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் எச்சரித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com