ஒடிசாவில் தொடர் கனமழை: மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’

காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒடிசா மட்டுமின்றி, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் இன்று கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Heavy rain lashes Odisha, IMD issues 'red warning' for entire state
ரெட் அலர்ட் எச்சரிக்கை
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவில் நேற்று முதல் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலம் முழுவதும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி நன்கு வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று ‘ரெட் அலர்ட்’ விடுத்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் இன்று கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட் 14 ) வரை வடக்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா, மேற்கு வங்காளம், வங்கதேச கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை பதிவு

*ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் போக்ராயில் அதிகபட்சமாக 236 மி.மீ. மழையும்,

*சியாமகுந்தாவில் 230 மி.மீ.மழையும்,

*மயூர்பஞ்ச் மாவட்டம் பாரிபாடாவில் 215 மி.மீ.மழையும்,

*பாலசோரின் ராஜ்காட்டில் 204 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

*பாலசோர் நகரில் இன்று காலை 5.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 137 மி.மீ. மழை பதிவாகியுள்ள நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

*மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சிமிலிபால் மலைப்பகுதிகளிலும் மிக கனமழை பெய்துள்ளது. இதனால் புதபலங்கா, ஜலாகா உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

ஒடிசா கடலோரப் பகுதியில் 40கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் ஏற்படும் நேரங்களில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விடுமுறை

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவ பெற்றோர்களுக்கு விடுமுறை குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com