உத்தரகாண்டில் மீண்டும் மேகவெடிப்பால் பயங்கர மழை

உத்தரகாண்டில் புகழ் பெற்ற தப்கேஷ்வர் கோவிலை வெள்ளம் மூழ்கடித்து சென்றது.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் இம்மாத தொடக்கத்தில் இருந்து மேகவெடிப்பால் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டே வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு தலைநகர் டேராடூன், சம்பாவத், உதம் சிங் நகர் உள்ளிட்ட பல இடங்களில் மேகவெடிப்பு காரணமாக இடைவிடாமல் மழை பெய்தது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் 13 பேர் உயிரிழந்தனர். 900-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.
இந்த நிலையில், சமோலி மாவட்டம் நந்தநகர் காட்டில் உள்ள குந்த்ரி லங்காபாலி பகுதியில் இன்று அதிகாலை மேகவெடிப்பால் வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது போல பயங்கர மழை பெய்தது. இதனால் அனைத்து ஆறுகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டன. வீடுகள் மண்மேடு போல புதைந்து போனதால், அதில் வசித்த 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இது குறித்து அறிந்ததும் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மருத்துவ குழுவினரும் ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் அங்கு சென்றனர். இடிபாடுகளை அகற்றி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இன்னும் 10 பேரைக் காணவில்லை; அவர்கள் உயிருடன் உள்ளார்களா, இல்லையா என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாலங்கள், சாலைகள் முற்றிலும் சேதமடைந்ததால் பல இடங்கள் துண்டிக்கப்பட்டு தீவாக காட்சியளிக்கின்றன. உத்தரகாண்ட் புகழ்பெற்ற தப்கேஷ்வர் கோவிலை வெள்ளம் மூழ்கடித்துச் சென்றது. அந்தக் கோவிலின் நுழைவுவாயிலில் உள்ள அனுமன் சிலை தண்ணீரில் மூழ்கியதால் வெளியே தெரியவில்லை. தொடர்ந்த மழை, நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் உத்தரகாண்டுக்கு சுற்றுலா வந்த 2,500-க்கும் மேற்பட்ட பயணிகள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருகிற 20-ந்தேதி வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிகப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது






