கனமழை எதிரொலி ; அமர்நாத் யாத்திரை மீண்டும் நிறுத்தம்

சில நாட்களுக்கு முன்பு இதேபோல் கனமழை, நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்தப்பட்டது
ஜம்மு,
காஷ்மீரில் இமயலையில் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரமுள்ள அமர்நாத் குகை கோவிலுக்கான யாத்திரை இந்த ஆண்டு கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 38 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை அடுத்த மாதம் 9-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் ''காஷ்மீரில் அதிகாலை பெய்த கனமழை காரணமாக ஜம்மு அடிப்படை முகாமில் இருந்து பஹல்காம், பால்டால் ஆகிய இரு வழித்தடங்களில் செல்லும் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டு உள்ளது.
ஜம்மு கமிஷனர் ரமேஷ் குமார் கூறுகையில், ''யாத்திரை பாதைகளில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, காஷ்மீரில் உள்ள அடிப்படை முகாம்களில் பக்தர்கள் நடமாட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (வியாழக்கிழமை) வரை ஜம்முவில் உள்ள பகவதி நகரில் இருந்து அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.சில நாட்களுக்கு முன்பு இதேபோல் கனமழை, நிலச்சரிவு காரணமாக அமர்நாத் யாத்திரை ஒருநாள் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






