பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பெங்களூருவில் கனமழை கொட்டி தீர்த்தது.
பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை
Published on

பெங்களூரு:

கோடை வெயில்

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் மக்கள் கோடையில் இருந்து தப்பிக்க வீடுகளுக்குள் முடங்கினர். குளிர்பானங்கள், மண்பானை தண்ணீர், தர்ப்பூசணி பழங்களை சாப்பிட்டு கோடை வெயிலை சமாளித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பெங்களூருவில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்தது. இது பகல் முழுவதும் வெயிலின் கொடுமையில் சிக்கிய மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல பெங்களூருவில் வெயில் வாட்டி வதைத்தது.

கனமழை

ஆனால் மதியத்திற்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மேல் பெங்களூரு நகரில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய ஆரம்பித்தது. இரவு 8 மணி வரை அதாவது சுமார் 2 மணி நேரம் கனமழை கெட்டி தீர்த்தது.

மெஜஸ்டிக், கே.ஜி.ரோடு, யஷ்வந்தபுரம், ஆர்.டி.நகர், மேக்ரி சர்க்கிள், எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் ரோடு, கப்பன் பார்க், ராஜாஜிநகர், மகாலட்சுமி லே-அவுட், விஜயநகர், மாகடி ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கெட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் சாலைகளில் மரங்களும் முறிந்து விழுந்தன. அந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். திடீர் கனமழையால் பெங்களூரு நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com