கேரளாவில் பெய்த கனமழை: 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு

கேரளாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று மழைக்கு 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொச்சி,

கேரளாவில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், திங்கட்கிழமையன்று கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் அதிகப்படியான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இங்கு அதிக அளவில் பொருட் சேதம் ஏற்பட்டிருப்பதுடன் 3 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

நேற்றுப் பெய்த கனமழையால் ஒரு வீடு முற்றிலும் இடிந்து சேதமடைந்தது. 28 வீடுகள் பகுதியாக சேதமடைந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலியானார்கள். கண்ணூர் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் வேறுவேறு சம்பவங்களில் 2 குழந்தைகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். எர்ணாகுளத்தில் மண்சரிவு ஏற்பட்டத்தில் டிரைவர் ஒருவர் உயிரிழந்தார்.

கேரளாவில் அக்டோபர் 1 முதல் 15-ந்தேதி வரையில் 833.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை அதிகாரிகள் அளவிட்டு உள்ளனர். இந்த காலத்தில் சராசரியாக 407.2 மில்லிமீட்டர் மழைப்பொழிவே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வழக்கத்தைவிட 105 சதவீதம் அதிகமாக இருமடங்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது.

இதில் பத்தனம்திட்டா மாவட்டம் அதிகபட்சமாக 194 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவை பெற்றுள்ளது. கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டங்கள் முறையே 127, 116, 111 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவை பெற்றுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்லம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதியில் அதிகபட்சமாக 11.7 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பாய்ந்தோடி பத்தனம் திட்டா மற்றும் கொல்லம் மாவட்டங்களின் மேற்குப் பகுதிகளை வெள்ளக் காடாக்கியது.

தொடர்மழையால் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. மேலும் 7 மாவட்ட கலெக்டர்கள் கல்வி நிறுவனங்களுக்கு திங்கட்கிழமை விடுமுறை அறிவித்து உத்தரவிட்டனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com