

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. மாநிலத்தின் முக்கிய நகரங்களான வாரணாசி, ரேபரேலி, அமேதி, லக்னோ, உன்னாவ் ஆகிய நகரங்கள் உள்பட பல இடங்களில் மழை வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் மழை வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மரங்கள் வேரோடு சாய்ந்ததால் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன என தெரிவித்தனர்.