

சபரிமலையில் சன்னிதானம் முதல் நிலக்கல் வரையிலான வனப்பகுதிகள் உயர் பாதுகாப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி ஒரு ஹெலிகாப்டர் சபரிமலை சன்னிதான பகுதியில் மிகவும் தாழ்வாக பறந்தது. அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. பாதுகாக்கப்பட்ட பகுதியில், அதிலும் சன்னிதானத்தின் மேல் பகுதியில் உள்ள கொடிமரத்திற்கு மிகவும் அருகாமையில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டதில், தாழ்வாக பறந்தது கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் என்பது தெரியவந்தது. மோசமான வானிலை மற்றும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான பகுதி இருந்த இடத்திற்கு தவறுதலாக சென்றுவிட்டதாக கடலோர காவல்படை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில், ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்த விவகாரம் தொடர்பாக சம்பவம் நடந்த மறுநாளே வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கடலோர காவல்படை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்ட நிலையிலும், போலீசாரின் விசாரணை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்றது. இதனுடன், கடலோர காவல்படை உள்துறை விசாரணையும் நடத்தியது. அதில், சபரிமலை சன்னிதான பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததற்கு மூத்த அதிகாரி ஒருவர் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.நெடும்பச்சேரி விமான நிலையத்தில் உள்ள கடலோர காவல்படை விமான இயக்க பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர், வானத்தில் இருந்து அய்யப்பனை கும்பிடுவதற்காக ஹெலிகாப்டரை சன்னிதான பகுதியில் தாழ்வாக பறக்கச் செய்துள்ளார்.
அந்த அதிகாரி ஹெலிகாப்டரை இயக்கும் விமானியாகவும் இருந்துள்ளார். அவர் துணை விமானி மற்றும் ஒரு ஒளிப்பதிவு குழுவினருடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது ஒளிப்பதிவு குழுவினர் சபரிமலை அய்யப்பன் கோவிலை படம் எடுத்துள்ளனர்.மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அந்த மூத்த அதிகாரி நெடும்பச்சேரி விமான நிலைய பணியில் இருந்து கொச்சியில் உள்ள கடலோர காவல்படை மண்டல தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த அதிகாரி, இதற்கு முன்பும் சபரிமலை மற்றும் குருவாயூர் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் இதேபோன்று பயணித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.