

புதுடெல்லி,
ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய இங்கிலாந்து இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், மேலும் பல ராணுவ ஒப்பந்தங்களில் பணம் பெற்று இருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கிய பிரமுகர்களின் பயணத்துக்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது.
இந்த ஒப்பந்த முறைகேடு தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். துபாயில் வசித்து வந்த அவர் கடந்த மாதம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்து காவலில் எடுத்து விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நேற்று அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிதி மோசடி தடுப்பு சட்டம் தொடர்பாக கிறிஸ்டியன் மைக்கேலிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு நீதிமன்ற காவல் கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேலுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.
முன்னதாக, இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், மேலும் பல ராணுவ ஒப்பந்தங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் பெற்று, அதை ஹவாலா தரகர்கள் மூலம் மாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்த அமலாக்கத்துறை வக்கீல்கள், அது குறித்தும் விசாரிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்தனர்.
குறிப்பாக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 24.25 மில்லியன் யூரோ (ஒரு யூரோவின் இந்திய மதிப்பு சுமார் ரூ.79) மற்றும் 1.60 கோடி பவுண்டு (ஒரு பவுண்டின் இந்திய மதிப்பு சுமார் ரூ.88.5) தொகை பெற்றிருப்பதாக வக்கீல்கள் தெரிவித்தனர். இந்த விவகாரம் மத்திய அரசு வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.