சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்க கேரள அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை

சபரிமலை கோவிலுக்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசுக்கு உயர்மட்டக்குழு சிபாரிசு செய்துள்ளது. இதனால் இன்னும் ஓரிரு நாளில் இதற்கான முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்க கேரள அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை
Published on

திருவனந்தபுரம்,

கொரோனா பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 7 மாதங்களாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மண்டல, மகரவிளக்கு பூஜையையொட்டி கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுவும் ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள், சனி, ஞாயிற்றுக்கிழமையில் 2 ஆயிரம் பக்தர்கள் என நிர்ணயிக்கப்பட்டு பக்தர்கள் இருமுடி கட்டுடன் அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

மேலும், கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம், ஆன்லைனில் முன்பதிவு என பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்தது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சபரிமலையில் வருமானத்தை விட செலவு அதிகமாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனால் கூடுதல் பக்தர்களை சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கேரள தலைமை செயலாளர் தலைமையிலான உயர்மட்டக்குழு அரசுக்கு சிபாரிசு செய்துள்ளது. எத்தனை பக்தர்களை அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் ஓரிரு நாளில், சபரிமலைக்கு கூடுதலாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தெரியவரும் என்று கூறப்படுகிறது.

மேலும், குருவாயூர் கிருஷ்ணசாமி கோவிலில் டிசம்பர் 1-ந் தேதி முதல் தினசரி 4 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். அதே போல் கோவிலில் 100 திருமணங்கள் வரை நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்குட்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com