

மும்பை,
விவசாய விளைபொருட்களுக்கு அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தில் விஷத்தன்மை கலந்திருப்பதாகவும், இதனால் அதனை விவசாயிகள் உபயோகிக்கும்போது அதில் இருந்து வெளியாகும் நச்சு அவர்களது உயிருக்கே உலை வைப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதனால், யவத்மால் மாவட்டத்தில் சமீபத்தில் 18 விவசாயிகள் பலியாகி இருக்கின்றனர். விதர்பாவில் யவத்மால் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து உள்ளனர், அதன்பின்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) சுதீர் ஸ்ரீவஸ்தவா தலைமையில் விசாரணை நடத்த முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டு உள்ளார்.
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்து உள்ளது.
இவ்விவகாரத்தில் அனைத்து காரணிகளும் முழுமையாக ஆய்வு செய்யப்படும், குற்றத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என முதல்-மந்திரி பட்னாவிஸ் கூறிஉள்ளார். விவசாயிகள் பயிரிட்டு இருந்த பருத்திக்கு பூச்சிக்கொல்லி மருந்தை அடித்து உள்ளனர் என தெரியவந்து உள்ளது. சமூக ஆர்வலர் கிஷோர் திவாரி பேசுகையில், இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றார். ஆங்கிலப் பத்திரிக்கைக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், பூச்சிக்கொல்லி மருத்து அடித்த பின்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு யவத்மால் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 70 விவசாயிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள், 4 விவசாயிகளுக்கு கண்கள் தெரியவில்லை, என குறிப்பிட்டு இருந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மாராட்டிய மாநில அமைச்சரவையும் ஆலோசனை நடத்தி உள்ளது. மராட்டிய மாநில விவசாயத்துறை மந்திரி பேசுகையில், இவ்விவகாரத்தை மாநில அரசு முக்கியமானதாக எடுத்துக் கொண்டு உள்ளது, இச்சம்பவம் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய கேட்டுக் கொண்டு உள்ளோம், என கூறிஉள்ளார்.
முன்னாள் மத்திய விவசாயத்துறை மந்திரி சரத் பவாரும் முழுமையான விசாரணை அறிக்கையை கோரிஉள்ளார்.