கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும்: பசவராஜ் பொம்மை

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும்: பசவராஜ் பொம்மை
Published on

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

விரைவில் முடிவுக்கு வரும்

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் ஒன்றாக அமர்ந்து பேசினாலே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஆனால் ஹிஜாப் விவகாரம் வெளியே இருந்து வந்தவர்களால் கர்நாடகத்தில் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

கர்நாடக ஐகோர்ட்டு இந்த விவகாரம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஐகோர்ட்டு இடைக்கால தடையை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும்

ஐகோர்ட்டு உத்தரவை மீறுவது சட்டத்திற்கு எதிரான செயல் ஆகும். ஐகோர்ட்டு உத்தரவை அரசு பின்பற்றுகிறது. பள்ளி, கல்லூரிகள் எப்போதும் போல் சகஜ நிலைக்கு திரும்பவேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு குங்குமம் வைத்து கொண்டு வந்த மாணவ-மாணவிகளை தடுத்து நிறுத்தியது பற்றி எனது கவனத்திற்கும் வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளி கல்வித்துறை உரிய முடிவு எடுக்கும். குங்குமம் வைத்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு வருவதற்கு அரசோ, கல்வி நிறுவனங்களே எந்த விதமான தடையும் விதிக்கவில்லை.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com