இமாசல பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழை: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள், மூழ்கிய பஸ் ஸ்டாண்ட்

கனமழை காரணமாக சோன்காட் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இமாசல பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழை: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள், மூழ்கிய பஸ் ஸ்டாண்ட்
Published on

சிம்லா,

வடமாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தில், நடப்பு ஆண்டில் பரவலாக பல்வேறு இடங்களிலும் முன்பே தென்மேற்கு பருவமழை பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேகவெடிப்புகளும் ஏற்பட்டு மாநிலம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்தநிலையில், அம்மாநிலத்தில் தொடரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை மழையின் காரணமாக முடங்கிபோயுள்ளது. குறிப்பாக நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டி பகுதியில் இரவு முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டியது. மழை காரணமாக சோன்காட் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரம் இருந்த ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. விடிய விடிய பெய்த கனமழையால் தர்மபூர் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள பஸ் ஸ்டாண்டுக்குள் வெள்ளம் புகுந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்கள், ஏராளமான வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

தர்மபூர் நகரத்தில் உள்ள விடுதிக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த 150க்கும் அதிகமான மாணவர்கள், கட்டடங்களின் கூரைகளுக்கு சென்று பாதுகாப்பாக தங்கி உயிர்தப்பினர். மஹ்ரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மழையின் பாதிப்பை அறிந்த பேரிடர் குழுவினர், உள்ளூர் போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு இடையே அதிகாரிகள் சேதத்தை மதிப்பீடு செய்து வருகின்றனர். அண்மைக்கால கனமழைக்கு இமாச்சல பிரதேசத்தில் மட்டும் 404 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com