முதல்-மந்திரி ஆன ஹிமந்தாவுக்கு அசாமின் கலாசாரம் என்னவென தெரியவில்லை; கெஜ்ரிவால் தாக்கு

அசாமின் முதல்-மந்திரியான ஹிமந்தா பிஸ்வாவுக்கு அசாமின் கலாசாரம் என்னவென தெரியவில்லை என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தாக்கி பேசியுள்ளார்.
முதல்-மந்திரி ஆன ஹிமந்தாவுக்கு அசாமின் கலாசாரம் என்னவென தெரியவில்லை; கெஜ்ரிவால் தாக்கு
Published on

கவுகாத்தி,

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்-மந்திரியான கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் ஆகியோர் அசாமில் முதன்முறையாக இன்று அரசியல் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

டெல்லி சட்டசபையில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் சமீபத்தில் பேசும்போது, அசாமில் பா.ஜ.க. தலைமையிலான அரசில் முதல்-மந்திரியாக உள்ள ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக சாடி பேசினார். நாட்டின் பிற மாநிலங்களில் ஹிமந்தாவுக்கு எதிராக வழக்குகள் உள்ளன என கூறினார்.

இந்நிலையில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா ஆவேசமுடன் பேசும்போது, டெல்லி சட்டசபையில், என்னை பாதுகாத்து கொள்ள நான் இல்லை என்று தெரிந்த நீங்கள் என்னை பற்றி பேசியிருக்க கூடாது.

எனக்கு எதிராக என்ன வழக்கு உள்ளது? என கூறுங்கள் பார்ப்போம் என சவாலாக கேட்டார். அதனால், எனக்கு எதிராக சில வழக்குகள் உள்ளன என்பது போல் சிலர் அனைத்து மக்களையும் தவறாக வழி நடத்துகின்றனர்.

காங்கிரஸ் கட்சியால் பல்வேறு நீதிமன்றங்களில் எனக்கு எதிராக உள்ள சில வழக்குகளை தவிர, ஒட்டுமொத்த இந்தியாவிலும் எனக்கு எதிராக வழக்குகளே இல்லை என பிஸ்வா கூறினார்.

கெஜ்ரிவால் போன்ற கோழை சட்டசபையில் பேசுகிறார். அதனால், ஏப்ரல் 2-ந்தேதி அவர் அசாமுக்கு வரட்டும். ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எதிராக ஒரு வழக்கு உள்ளது என அவர் கூறட்டும். அதன்பின்னர், அவருக்கு எதிராக நான் அவதூறு வழக்கு தொடுப்பேன் என்று நேற்று பேசும்போது குறிப்பிட்டார்.

எனக்கு எதிராக ஊழல்வாதி என ஒரு வார்த்தை அவர் பேசட்டும். அடுத்த நாளே, மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக வழக்கு தொடுத்தது போன்று, கெஜ்ரிவால் மீதும் நான் அவதூறு வழக்கு போடுவேன் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பேசினார்.

இந்த நிலையில், அசாமுக்கு வருகை தந்துள்ள டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, என்னை சிறையில் போட்டு விடுவேன் என ஹிமந்தா மிரட்டி வருகிறார்.

அவர் அசாமின் முதல்-மந்திரியாகி இருக்கிறார். ஆனால், ஹிமந்தா பிஸ்வாவுக்கு அசாமின் கலாசாரம் பற்றி படித்து தெரிந்து கொள்ளவில்லை. அவருக்கு அசாமின் கலாசாரம் என்னவென தெரியவில்லை.

அசாமின் மக்கள் அவரை போன்றவர்கள் இல்லை. விருந்தினர்களுக்கு அவர்கள் தேநீர் கொடுத்து உபசரிப்பது வழக்கம். தங்களுடைய விருந்தினர்களை அசாம் மக்கள் சிறையில் தள்ளுவது இல்லை என்று கெஜ்ரிவால் அதிரடியாக பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com