‘புனித சடங்குகள் இல்லாமல் பதிவு செய்த இந்து திருமணங்கள் ஏற்புடையது அல்ல’ - குஜராத் ஐகோர்ட்டு தீர்ப்பு

திருமண சடங்குகள் ஒரு தனிநபரின் ஆன்மாவை தூய்மைப்படுத்தி மாற்றியமைப்பதாக நம்பப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
‘புனித சடங்குகள் இல்லாமல் பதிவு செய்த இந்து திருமணங்கள் ஏற்புடையது அல்ல’ - குஜராத் ஐகோர்ட்டு தீர்ப்பு
Published on
Updated on

ஆமதாபாத்,

இங்கிலாந்தில் வசிக்கும் கவுஷல் சோனார், ஆமதாபாத்தில் வசிக்கும் பெண்ணுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 'தான் அவருடன் எந்தத் திருமணத்தையும் நடத்தவில்லை, இந்து முறைப்படியான சடங்குகள் எதையும் செய்யவில்லை. அவருடன் கணவனாக வாழவில்லை தன்னிடம் மோசடியாக கையெழுத்து பெற்று அவர் திருமண பதிவு சான்றிதழ் வைத்து உள்ளார். எனவே எங்கள் திருமண பதிவை செல்லாது என அறிவிக்க வேண்டும்' என்று குஜராத்தில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தை அணுகினார்.

ஆனால் பெண் திருமண பதிவு சான்றிதழ் வைத்திருந்ததால் கோர்ட்டு, அவர்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து அவர் ஆமதாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். விசாரணையின்போது, இரு தரப்பினருக்கும் இடையே திருமண சடங்குகள் எதுவும் நடைபெறவில்லை என்பதையும், இருவரும் கணவன்-மனைவி உறவைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் பெண் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து இந்த வழக்கில் நீதிபதிகள் இலேஷ் வோரா மற்றும் ஆர்.டி.வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில் குடும்பநல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்தனர். மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "மணமகனும், மணமகளும் புனித நெருப்பின் முன்னால் இணைந்து ஏழு அடிகள் எடுத்து வைக்கும் 'சப்தபதி' (சம்ஸ்காரம்) போன்ற சடங்குகள் செய்யப்பட வேண்டும்.

திருமண சடங்குகள் ஒரு தனிநபரின் ஆன்மாவை தூய்மைப்படுத்தி மாற்றியமைப்பதாக நம்பப்படுகிறது. அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். திருமணம் என்பது வெறும் 'பாடல் மற்றும் நடனம்' அல்லது 'விருந்து' கொண்டாடும் நிகழ்வோ அல்லது வணிக ரீதியான பரிவர்த்தனையோ அல்ல; வெறும்பதிவு மட்டும் இந்து திருமணத்தில் ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com