வக்பு மசோதாவை எதிர்ப்பவர்களை வரலாறு மன்னிக்காது: மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு

பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
வக்பு மசோதாவை எதிர்ப்பவர்களை வரலாறு மன்னிக்காது: மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு
Published on

புதுடெல்லி,

வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, மத்திய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. இத்தகைய சூழலில், நாடாளுமன்றத்தில் வக்பு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், பா.ஜ.க. தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. மக்களவையில் தற்போதுள்ள 542 உறுப்பினர்களில் 293 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க.விற்கு மட்டும் 240 எம்.பி.க்கள் உள்ளனர். மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 119 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாகும்.

இதில் பா.ஜ.க.விற்கு மட்டும் 98 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணியையும் சேர்த்தால் 123 உறுப்பினர்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதால், எம்.பி.க்கள் அனைவரும் தவறாது அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் தங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் விவாதத்தின்போது அவையில் கலந்து கொள்ள முடிவு செய்தபோதும், மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டு உள்ளன. இந்நிலையில், இந்த திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, வக்பு மசோதா மூலம் மசூதிகள் கையகப்படுத்தப்படும் என்பது தவறான பிரசாரம் ஆகும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கான அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன. வக்பு வாரிய நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடாது என்று கூறினார். அதில், தலையிடுவதற்காக மசோதா கொண்டு வரப்படவில்லை என்றார். இந்த மசோதாவை எதிர்ப்பவர்களை வரலாறு மன்னிக்காது என்றும் கூறினார். மசோதா மீது இன்று விவாதம் நடைபெறுகிறது. இதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com