கனமழை எதிரொலி.. கேரளாவில் முக்கிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


கனமழை எதிரொலி.. கேரளாவில் முக்கிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x

கோப்புப்படம்

கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இடுக்கி மாவட்டத்தில் நேற்று, கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையத்தின் மூலம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. நேற்றும் மழை தொடர்ந்து பெய்ததால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. மழைக்கு பல்வேறு இடங்களில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன.

இந்நிலையில் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் கண்ணூர், வயநாடு, கோட்டயம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதன்படி அங்கன்வாடிகள், மதரசாக்கள் மற்றும் பயிற்சி மையங்களும் வகுப்புகளை நடத்தக்கூடாது என்று அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழ்வு மண்டலம் காரணமாக கேரளா மாநிலம் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சூர், மலப்புரம், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story