

புதுடெல்லி,
இந்தியா தலைமை தாங்கி நடத்தும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்பட பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் மற்றும் ஆதரவு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களுடன் அந்நாட்டின் தூதுக்குழுவினர், மந்திரிகள் மற்றும் பல உயர் அதிகாரிகள் டெல்லி வருகிறார்கள். தலைவர்கள் தங்கும் நட்சத்திர விடுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநாட்டையொட்டி டெல்லியில் 35 சாலைகளில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டு, 4,800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் குடிவரவு கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக நவம்பர் 28-ந்தேதி (சனிக்கிழமை) அன்று சுப்ரீம் கோர்ட்டு இயங்கும். டெல்லி மாநகராட்சி சார்பில் நகரை தூய்மைப்படுத்தும் பணிகளும் அழகுபடுத்தும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.