

புதுடெல்லி
பொதுத்துறை வங்கிகள் 5 நாட்கள் மட்டுமே இனி செயல்படும் என்று தகவல் வெளியானது.
வங்கி ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நாடு முழுவதும் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் என தகவல் வெளியானது. வாரத்துக்கு 5 நாள் வேலை, ஓய்வூதிய பயன்கள், காலிப்பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
வார இறுதி விடுமுறையை அடுத்து அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்ச்சியாக, வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில், 27-ந்தேதியான ஞாயிற்றுக்கிழமையன்று வங்கிகள் இயங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதேபோன்று, வேலை நிறுத்தத்துக்கு முன்பு அத்தியாவசிய வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ளுமாறு வங்கிகளும் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தின. மேலும் பண தேவைகளுக்கு தங்கள் வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் மற்றும் இன்டர்நெட் பேங்கிங், யு.பி.ஐ. உள்ளிட்டவற்றை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
இதற்கேற்ப, பல்வேறு பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை உஷார்படுத்தி குறுந்தகவல்களை அனுப்பின. எனினும், இந்த வேலை நிறுத்தம் அதற்கு முன்பாகவே திடீரென வாபஸ் பெறப்பட்டது.
இந்திய வங்கிகள் சங்க பிரதிநிதிகளுக்கும், வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்புக்கும் இடையே நீண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவிப்பது தொடர்பாக, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளை ஆராய்ந்து முடிவெடுக்க உயர்மட்ட குழு ஒன்றை உடனடியாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கான செயல்திறன் ஊக்கத்தொகை திட்டமான பி.எல்.ஐ. தொடர்பான மாற்றங்கள் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பிற கோரிக்கைகள் தொடர்பாகவும் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்ட போராட்ட நடவடிக்கைகள் மற்றும் 3 நாள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (யு.எப்.பி.யு.) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், செப்டம்பர் 28-ந்தேதி நாடு முழுவதும் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டன.
இந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என தகவல் பரவியது. இதன்படி, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் இனி சனிக்கிழமைகளில் செயல்படாது. திங்கள் முதல் வெள்ளி வரை என வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். இந்த நடைமுறை இந்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அனைத்து சனிக்கிழமைகளும் பொதுத்துறை வங்கிகளுக்கு விடுமுறை என வெளியான தகவல் வதந்தி என்று தெரிய வந்துள்ளது. இதனை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தி உறுதிப்படுத்தி உள்ளது. விடுமுறை தொடர்பாக பரவும் செய்தி போலியானது. அதுபோன்ற அறிவிப்பு எதனையும் மத்திய நிதி அமைச்சகம் வெளியிடவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.