கற்பழிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க 5 ஆயிரம் கருவிகளை வாங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்

பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விரைந்து விசாரிக்க 5 ஆயிரம் கற்பழிப்பு புலனாய்வு கருவிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வாங்கியுள்ளது.
கற்பழிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க 5 ஆயிரம் கருவிகளை வாங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்
Published on

புதுடெல்லி,

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 12 சதவீதம் கற்பழிப்பு வழக்குகளாக உள்ளன என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது. அதிகரித்து வரும் இதுபோன்ற குற்றங்களுக்கான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய மந்திரி கிரெண் ரிஜிஜு நாடாளுமன்ற மேலவையில் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றிற்கு அளித்துள்ள பதிலில், 2014-16 ஆண்டுகளில் நாட்டில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன என தெரிவித்துள்ளார்.

அவற்றில் கடந்த 2016ம் ஆண்டில் 38,947 வழக்குகளும், 2015ம் ஆண்டில் 34,651 வழக்குகளும் மற்றும் 2014ம் ஆண்டில் 36,735 வழக்குகளும் பதிவாகி உள்ளன என தெரிய வந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் 13 ஆயிரம் கற்பழிப்பு வழக்குகளில் தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்படுவது இல்லை. அதற்கான வசதிகள் ஆய்வகங்களில் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விரைந்து விசாரிக்க 5 ஆயிரம் கற்பழிப்பு புலனாய்வு கருவிகள் அடங்கிய கிட்களை வாங்கியுள்ளது. அவை நாடு முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட காவல் நிலையங்களுக்கு ரேண்டம் முறையில் விநியோகிக்கப்படும்.

இவை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் உடனடி மருத்துவ புலனாய்வு மற்றும் சாட்சிகளை சேகரிக்கும் பணிக்ளுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கிட்களில் ரூ.200 முதல் ரூ.300 மதிப்பிலான பரிசோதனை குழாய்கள் மற்றும் கண்ணாடி புட்டிகள் ஆகியவை இருக்கும். இவற்றின் உதவியுடன், ரத்தம், விந்து மற்றும் வியர்வை போன்ற பல்வேறு மாதிரிகளை சேகரிக்க முடியும்.

பின் அவை உடனடியாக மூடப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். அதனுடன் சீல் வைக்கப்பட்ட நேரம், காவல் அதிகாரி மற்றும் மருத்துவர் ஆகியோரின் பெயர்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.

இதனால் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் விரைந்து விசாரிக்கப்படும் என மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com