டெல்லியில் 1,000 பஸ்கள் வாங்கும் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை; உள்துறை அமைச்சகம் பரிந்துரை

டெல்லியில் 1,000 பஸ்கள் வாங்கும் விவகாரத்தில் ஊழல் புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது.
டெல்லியில் 1,000 பஸ்கள் வாங்கும் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை; உள்துறை அமைச்சகம் பரிந்துரை
Published on

பா.ஜனதா புகார்

டெல்லி மாநில போக்குவரத்துக்கழகத்துக்கு 1,000 தாழ்தள பஸ்கள் வாங்குவதற்கு மாநில அரசின் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக ரோகிணி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா, இது தொடர்பாக மாநில துணை நிலை கவர்னரிடம் புகார் அளித்தார்.இந்த ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக்குழு அமைக்குமாறும் அவர் வலியுறுத்தி இருந்தார்.ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டை கெஜ்ரிவால் அரசு மறுத்தது.

விசாரணைக்குழு அமைப்பு

எனினும் இந்த ஊழல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த 3 நபர் குழு ஒன்றை துணை நிலை கவர்னர் அனில் பைஜால் கடந்த ஜூன் மாதம் அமைத்தார்.இதனால் இந்த ஒப்பந்தத்தை மாநில அரசு நிறுத்தி வைத்தது.அதேநேரம் துணைநிலை கவர்னர் அமைத்த விசாரணைக்குழுவினர் நடத்திய ஆய்வில், மேற்படி ஒப்பந்தத்தில் பல்வேறு நடைமுறை குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதை அகற்றுமாறு இந்த குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

பூர்வாங்க விசாரணை

இது தொடர்பாக அந்த குழுவினர் அளித்த அறிக்கையை பரிசீலித்த துணைநிலை கவர்னர், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தார்.அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் இந்த மொத்த விவகாரத்தையும் ஆய்வு செய்தது.இதைத்தொடர்ந்து டெல்லி அரசின் 1,000 பஸ்கள் கொள்முதல் விவகாரத்தில் சி.பி.ஐ. மூலம் பூர்வாங்க விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் நேற்று பரிந்துரைத்து உள்ளது.

டெல்லி அரசியலில் பரபரப்பு

இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முன்னதாக துணைநிலை கவர்னர் அமைத்த சிறப்புக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மேற்படி ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்பது தெளிவாகி இருப்பதாக கெஜ்ரிவால் அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com