ஓரினச்சேர்க்கை செயலி: பிளஸ்-1 மாணவரை 2 ஆண்டுகளாக சீரழித்த 14 பேர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்


ஓரினச்சேர்க்கை செயலி: பிளஸ்-1 மாணவரை 2 ஆண்டுகளாக சீரழித்த 14 பேர்... கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
x

ஓரினச்சேர்க்கை தொடர்பான செயலி மூலம் மாணவனுக்கு 14 பேர் அறிமுகமாகி உள்ளனர்.

காசர்கோடு,

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவன் 16 வயது சிறுவன். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான். இதற்கிடையே சிறுவன் தனது செல்போனில் ஓரினச்சேர்க்கை தொடர்பான செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்திருந்ததாக தெரிகிறது. இதன் மூலம் அவனுக்கு வாலிபர்கள், திருமணமான ஆண்களுடன் அறிமுகம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் செயலி மூலம் ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பகிர்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட சிறுவனை வற்புறுத்தினர். அதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவனை, கண்ணூர், கோழிக்கோடு, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகள், வீடுகளுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர். இதுபற்றி சிறுவன் வெளியே யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தான்.

இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி சிறுவனின் வீட்டுக்கு ஒருவர் வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அப்போது சிறுவனின் தாய் வீட்டுக்குள் வந்த போது, அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடினார். இதுபற்றி தனது மகனிடம் தாய் கேட்டு உள்ளார். அப்போது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி அழுதவாறு கூறினான். இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பினர் செந்தாரா போலீசில் புகார் அளித்தனர்.

இதை அறிந்த காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயபாரத் ரெட்டி சிறுவனின் வீட்டுக்கு வந்து, அவனிடம் விசாரணை நடத்தினார். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஓரினச்சேர்க்கை தொடர்பான செயலி மூலம் சிறுவனுக்கு 14 பேர் அறிமுகமாகி உள்ளனர். அதில் 21 முதல் 51 வயது வரை உள்ளவர்களும், திருமணமாகி குழந்தைகள் உள்ளவர்களும் அடங்குவர். அவர்கள் சிறுவனிடம் கடந்த 2 ஆண்டுகளாக தவறாக நடந்து கொண்டு வந்தனர்.

அதோடு பல்வேறு இடங்களுக்கு மாணவரை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போக்சோ சட்டம் உள்பட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் பணிபுரியும் ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் அதிகாரி, பள்ளி கல்வித்துறை அதிகாரி, ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர், எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 5 பேர் தலைமறைவாகி விட்டனர். காஞ்சங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை போலீசார் தலைமறைவான 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story