கேரளாவில் நடந்த கவுரவ கொலை; பெண்ணின் தந்தை, அண்ணன் கைது

கேரளாவில் நடந்த கவுரவ கொலை காரணமாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் முதல்-மந்திரி பதவி விலக கோரிக்கை எழுப்பப்பட்டது.
கேரளாவில் நடந்த கவுரவ கொலை; பெண்ணின் தந்தை, அண்ணன் கைது
Published on

கோட்டயம்,

கேரளாவில், காதல் திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கவுரவ கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது காதலியின் தந்தை மற்றும் அண்ணன் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமரநெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கெவின் பி.ஜோசப் (வயது 23). தலித் கிறிஸ்தவர். இவர், கோட்டயத்தில் ஒரு கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த நீனு (20) என்ற பெண்ணுடன் காதல்வயப்பட்டார். அவர்களின் காதலுக்கு நீனு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, பதிவு திருமணம் செய்வதற்காக, கோட்டயம் அருகே உள்ள பதிவாளர் அலுவலகத்தில் சமீபத்தில் இருவரும் கூட்டாக விண்ணப்பம் அளித்தனர்.

இதற்கிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை, நீனு குடும்பத்தினர் ஏற்பாடு செய்த ஆட்களால் கெவின் ஜோசப் கடத்திச் செல்லப்பட்டார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு காந்திநகர் போலீஸ் நிலையத்தில் நீனு புகார் அளித்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கெவின் ஜோசப், கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றில் நேற்றுமுன்தினம் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவரை நீனு குடும்பத்தினர் சித்ரவதை செய்து கவுரவ கொலை செய்து விட்டதாக கெவின் ஜோசப் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். கெவின் ஜோசப் உடல் நேற்று கோட்டயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக, நீனுவின் தந்தை சாக்கோ ஜான் (50), அண்ணன் சயானு சாக்கோ (26) உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதை அறிந்த சாக்கோ ஜானும், சயானு சாக்கோவும் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்போம் என்றும் மனுவில் கூறி இருந்தனர். இந்த மனு, இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், சாக்கோ ஜானும், சயானு சாக்கோவும் நேற்று கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த கவுரவ கொலை, கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையை கண்டித்து, காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகள் அழைப்பின்பேரில், கோட்டயம் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், இந்த விவகாரத்தில், போலீசார் மெத்தனமாக செயல்பட்டதால், காவல்துறையை கவனிக்கும் முதல்-மந்திரி பினராயி விஜயன் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com