காதலனுடன் செல்போனில் பேசிய பிளஸ் 2 மாணவியை சுட்டுக்கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்

துப்பாக்கி சூட்டில் முஸ்கன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் அம்பிதா கிராமத்தை சேர்ந்தவர் ஷல்பன். இவருக்கு முஸ்கன் (வயது 17) என்ற மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர்.
இதனிடையே, பிளஸ் 2 படித்து வந்த முஸ்கன் அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகியுள்ளார். இருவரும் காதலித்த நிலையில் இது குறித்து முஸ்கனின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, முஸ்கனை கண்டித்த அவரது தந்தை ஷல்பன், இளைஞருடன் பழகுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனாலும், இளைஞருடன் முஸ்கன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் முஸ்கன் மீண்டும் தனது காதலனுடன் செல்போனில் பேசியுள்ளார். இதை கண்டு ஆத்திரமடைந்த ஷல்பன் மகள் முஸ்கனை தனது வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் முஸ்கனை ஷல்பன் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் முஸ்கன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
முஸ்கனை சுட்டுக்கொல்ல அவரது சகோதரனும், ஷல்பனின் மகனுமான 15 வயது சிறுவனும் உதவியுள்ளான். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷல்பனையும் அவரது மகனையும் கைது செய்துள்ளனர். குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் மகள் காதலித்ததால் சுட்டுக்கொன்றதாக ஷல்பன் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






