

புதுடெல்லி,
மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ந் தேதி பல்வேறு இடங்களில் சுமார் 2 மணிநேரமாக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மும்பை தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் அண்மையில், அபு சலீம் உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் அவர்களுக்கான தண்டனை விவரத்தை இன்று வழங்கியது. இதில், அபு சலீம், கரிமுல்லா கான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தாகீர் மெர்சண்ட், பெரோஷ் கானுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரியாஸ் சித்திக்கிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்த வழக்கில் கடைசியாக நீதி வென்று இருப்பதாகவும் பயங்கரவாதத்துக்கு எதிராக போரடுவதிலும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுபவர்களை தண்டிப்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் நீதி கடைசியில் வென்று உள்ளது. 104 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அடுத்து தாவூத் இப்ராகீம் மற்றும் டைகர் மேமனாக இருக்க வேண்டும்.பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும் தண்டிப்பதிலும் இந்தியா உறுதியாக இருக்கும். நீண்ட கால தேடுதல் வேட்டைக்கு பிறகு அபு சலீம், கடந்த 2005 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டார் இவ்வாறு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.